Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

நெல்லிக்காய் ரசம்/சூப் (Two-in-One Special)

நெல்லிக்காய் “உள்ளங்கை நெல்லிக்கனி ” என்று அடை மொழி இட்டு கூறும் அளவுக்கு அளவில் சிறியதும் , பலனில் பெரியதுமாகிய அரியதொரு கனி ஆகும். வைட்டமின் C அதிகம் நிறைந்தது. அதன் உவர்ப்பு சுவை காரணமாக பெரும்பாலும் அதை உண்பதை தவிர்க்கிறோம்.ஆனால், இதுபோல ரசம் /சூப் வைத்து சாப்பிடும் போது அதன் சுவையே அலாதிதான்.
சாதாரண ரசம் போல் இல்லாமல் நெல்லிக்காய் ரசம்/சூப் கடலை பருப்பு சேர்த்து வேகவைத்து செய்வதால் இதன் ருசி மிகவும் வித்தியாசமாக சுவையாக இருக்கும். சூப் வேண்டும் என்று நினைப்பவர்கள் சூப்பாகவும், ரசமாய் சாப்பிட நினைப்பவர்கள் ரசமாகவும் சுவைக்கலாம். சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.
எங்கள் வீட்டில் அதில் உள்ள கடலைபருப்பு கூடுதல் விருப்பம் என்பதால் அதிகம் சேர்த்து உள்ளேன். குறைவாக வேண்டும் என்று கருதுபவர்கள் குறைவாகவும் சேர்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் -10 அல்லது 15
கடலை பருப்பு – 1 கப்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 5 அல்லது 6 பற்கள்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகு தூள் – 1 /2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:

கடலை பருப்பை அரை மணி நேரம் முன்பு கழுவி ஊற வைக்கவும்.
நெல்லிக்காயை உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் இட்டு துருவலாக அரைத்து கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம் )
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கொள்ளவும்.
அதில் நறுக்கிய இஞ்சி ,பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் நெல்லிக்காய் துருவலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு ஊறவைத்த கடலை பருப்பை தண்ணீருடன் சேர்த்து கலந்து அதை ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
கடலை பருப்பு நெல்லிக்காயுடன் சேர்ந்து வெந்து இருப்பதால் சற்று நிறம் மாறி இருக்கும்.
அடுப்பை அணைத்து அதை வேறு பாத்திரத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சூப் ஆக சுவைக்க நினைப்பவர்கள் சூப் ஆகவும் , சாதத்துடன் சேர்த்து ரசமாகவும் ருசிக்கலாம் .வெந்த கடலை பருப்புடன் சேர்த்து ரசத்தை சாப்பிடுவது ஒரு தனி சுவையே !!!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *