Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

வாழை பூ வடை

இதுல என்ன ஸ்பெஷல்? எல்லோரும் செய்யறது தானே? என்று நீங்க நினைக்கலாம். எல்லோரும் செய்யறது தான். ஆனா, எப்பவும் செய்யறோமா என்பது தான் கேள்வி குறி. ஆம் ! வாழை பூ எல்லாம் வாரத்திற்கு ஒரு முறையேனும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
செய்முறைக்கு முன்னதாக இதன் மருத்துவ குறிப்புக்கள் காண்போம் 😉
வாழை பூ வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்க வல்லது.
சர்க்கரை நோய் உடையவர்கள் அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும்.
மிக முக்கியமாக பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய கூடிய மருத்துவ தன்மை இதில் அடங்கி இருக்கிறது.
அதிகப்படியான விட்டமின்கள் அடங்கியது.

தேவையான பொருட்கள் :
வாழை பூ சிறியது -1
கடலை பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய் -காரத்திற்கு ஏற்ப
கருவேப்பிலை -சிறிது
உப்பு-தேவைக்கு ஏற்ப
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
இஞ்சி,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இவற்றை கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வாழை பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடலை பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு , அதை மிக்ஸியில் இட்டு அதனுடன் ,வாழை பூ மற்றும் சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய இஞ்சியையும் சேர்த்து மிக்ஸ்யில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். (அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.)
நறுக்கிய சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை இவற்றை அரைத்த கடலை பருப்பு மற்றும் வாழை பூவுடன் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வாழை பூவை சுத்தம் செய்யும் முறையை விளக்கும் புகைப்படம்
Photo Courtesy: http://veganmiam.com
குறிப்பு:

வாழை பூவில், ஒரு வித துவர்ப்பு சுவை அடங்கி இருக்கும். அதற்காக அதை சமைக்கும் முன் தயிரில் போட்டு ஊற வைப்பது, வடையில் சேர்க்கும் முன்பு வாழை பூவை அரைத்து அதை பிழிந்து சாறை வெளியேற்றி விடுவது என பல முறைகளை கையாளுகின்றனர்.
சுவை மட்டுமில்லாமல் மருத்துவ தன்மையும் நமக்கு போய் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை எல்லாம் தவிர்த்து விடுதல் நலம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
பலர் வாசனைக்காக சோம்பு, மல்லி தழை எல்லாம் சேர்ப்பது உண்டு. நான் வாழைப்பூவின் சுவை அதிகம் வேண்டும் என்பதால் அதை எல்லாம் தவிர்த்து இருக்கிறேன். விருப்பப்பட்டவர்கள் சேர்த்து கொள்ளலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *